வையாவி கோப்பெரும் பேகன்

வையாவி கோப்பெரும் பேகன் – சிறுகதை

— சங்கர் சீனிவாசன்

“அம்மா கண்ணகி… உனக்காவது உன் கணவனை இடித்துரைக்க இந்தப் பரணன் கிடைத்தான். பின்னொரு காலத்திலே சிலப்பதிகாரத்திலே ஒரு கண்ணகி வருவாள் பார். அவள் கணவன் கோவலனும் பரத்தையரே கதி என்று கிடப்பான். அந்தக் கண்ணகி தன் செல்வத்தையெல்லாம் அவன் பெயர் சொன்ன யாவருக்கும் அள்ளி வழங்கி எல்லாம் இழந்து, கணவன் மனந்திருந்தியபின் பாண்டிநாடு கூட்டிச் செல்கிறாள். ஆனால் பாவப்பட்ட கோவலன் அங்கு போய் திருட்டுப்பட்டம் பெற்று மாளப் போகிறான். அநீதி இழைத்த பாண்டிநாட்டை எரிக்கப் போகிறாள் கண்ணகி. இது தேவையா? கணவனே கண்கண்ட தெய்வம் என்று உளறியோர் கூற்றை நம்பிய மடந்தை அவள். அவனை இவளே இடித்திருந்தால், உரைத்திருந்தால், உதைத்திருந்தால் இது நடக்குமா? இல்லை மதுரை தான் எரியுமா? புலவன் இளங்கோவுக்கு ஒருப் பெருவேலை காத்திருக்கிறது. தவறிழைத்தவனை அய்யோ பாவம் என்றும், தவறுசெய்யக் காரணமாக இருந்தவளை கற்புக்கரசி என்றும் எழுதித் தொலைக்கப் போகிறான்” பெருமூச்சு விட்ட பரணர் மேலும் தொடர்ந்தார்.

“ஆனால் உன் கணவன் பேகனோ அன்புக்குக் கட்டுப்பட்டவன். நாடாளும் வேந்தன், அரசவை நீங்கி பரத்தை வீடு புகுதல் தகுமோ? எப்படியோ அவனை உன்னிடம் சேர்த்துவிட்டேன். வருகிறேன்” என்ற பரணரை விடைகொடுத்து அனுப்பினாள் கண்ணகி.
———-

அரண்மனை விட்டு வெளிவந்த பரணர், காத்திருந்த இரு காவலர்களோடும் பொதினிமலை முருகனை வணங்கி, வையாவியின் வீதிகளில் நடக்கத் துவங்கினார்.

பொதினிமலையைப் பிற்காலத்தவர் பழனிமலை என அழைப்பர். ஆவியர்குலத் தோன்றல் பேகனின் சிற்றரசை வையாவி என்பார் சிலர். வையாபுரி என்பார் சிலர். ஆவியர் குலத்தின் ஆவினன்குடி என்பார் சிலர். குறிஞ்சிநிலத்துக் குறவர்களின் முதல் கடவுள் பொதினிமலை முருகன். தங்கள் இனத்து வள்ளியின் மணாளனாயிற்றே?

காலாற நடந்த பரணரிடம் பேச்சுக் கொடுத்தனர் காவலர்கள். வேந்தன் பேகனின் அன்பைப் பெற்ற புலவர் பரணரிடத்தில் எல்லோருக்கும் மரியாதை உண்டு. அதோடு பரணரோடு முல்லைவேலி நகருக்குச் சென்று பேகனை தேரில் அழைத்து வந்தோர் தான் இரு காவலர்களும்.

அது மட்டுமா? ஒருமுறை பேகன் நகர்வலம் செல்ல, இதே இரு காவலர்கள் தான் உடன் சென்றார்கள். இளமழை பொழிந்த மாலையில் குளிரும் சேர, மயில் கூட்டம் ஆனந்தமாய் ஓடியாடி விளையாண்ட நேரத்தில், கூட்டத்தில் சேராத் தனிமயிலொன்று தோகை விரித்தாடியதை, குளிரில் நடுங்கிற்றென்று நினைத்திட்டான் பேதை பேகன்.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆனான். மாந்தர்தம் துயர்துடைக்க எடுத்ததோர் பிறவியில், மயிலின் துயரையும் துடைக்க நினைத்திட்டான். எடுத்தான் தன் பட்டு சால்வையை… போர்த்தினான் மயிலின் மீது. திகைத்து நின்ற காவலர்கள் இருவரும், வேந்தன் அரண்மனை புகுந்ததும் எல்லோரிடமும் பெருமையோடு சொல்லிச் செல்ல, உறுமீனுக்காய் காத்திருந்த புலவர்களும் வடித்திட்டார் இச்செய்தியை… இந்த அறியாப்பிள்ளையின் மேல் பரணருக்கும் பற்றுவர வேறு காரணமும் வேண்டுமோ?
———

“பரணரே… முல்லைவேலிக்குச் சென்றதும் என்ன நடந்தது என்று உரைத்திடுமேன்? நாங்கள் தேரிலே இருந்ததால் நடந்தவகை அறியவில்லை. ஏற்கனவே நீரும், கபிலரும், அரிசில் கிழாரும், பெருங்குன்றூர் கிழாரும் உவமையாய்ப் பாடியும் எம் வேந்தன் பேகன் கேட்கவில்லை. நீர் என்ன சொல்லி அழைத்ததால் பரத்தையர் வீடே மோட்சமாய் எண்ணிய வேந்தன் உடன் உங்களோடு வந்தான்? எம் வேந்தனைக் காத்த வழியை எமக்குக் கூறும்…” என்று பரணரிடம் கேட்டான் ஒரு காவலன்.

அன்புதான் காரணமென்றார் பரணர் “காவலரே… நீர் வேந்தர்க்குக் காவலர்… என் அப்பன் வள்ளுவன் தமிழுக்குக் காவலன்… அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்று சொன்ன வள்ளுவன் வாக்கை செயலால் காட்டுபவன் வேந்தன் பேகன். பின் எப்படி வராமல் போவான்?” என்ற பரணரின் பதில் காவலருக்குப் புரியாமல் போனது.

நின்னும்நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் 
முலையகம் நனைப்ப விம்மிக் 
குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே (புறநானூறு 143)

”பேகனே! உன் ஊருக்கு யான் வந்து உன்னையும் உன் மலையையும் பாடினேன். அப்போது வேதனையுற்று வடித்த கண்ணீரை நிறுத்த முடியாமல், மார்பு நனைய விம்மிக் குழல் அழுவதுபோல் அழுதாள் ஒருத்தி” எனக் கூறினார் அன்பர் கபிலர்.

“காவலரே… நீர் சொல்வது உண்மையே. நானும் மற்ற புலவர்களும் உவமையாய்ப் பாடி எடுத்துரைத்தோம். ஆனால் அதெல்லாம் உம் வேந்தனுக்கு உரைக்கவில்லை. பரிசு தந்தும் நாங்கள் அதை ஏற்கவில்லை. அதனால் தான் என் இறுதி அஸ்திரத்தை எடுத்தேன்” என்ற பரணர் நடந்ததை எடுத்துரைத்தார்.
————

முல்லைவேலியுள் தேர் நுழைந்தது. தேர் செலுத்திய காவலர்களை அப்பரத்தையின் வீட்டைக் கண்டுபிடிக்கப் பணித்தார் பரணர். ஏதடா ஊர் இது? பெயர் மட்டுமா முல்லை? எங்கு பார்த்தாலும் முல்லைக்கொடி. இம்முல்லையிலா மயங்கினான் பேகன்? கனியிருப்பக் காய் கவர்வதேன்? அரிதான குறிஞ்சி மலர் இருக்க முல்லை கவர்ந்ததேன்?

ஒருவழியாய் தேர் அப்பெண்ணின் வீட்டுமுன் நின்றது. “வேந்தனே பேகா… உன் மீதான அன்பு என்னை எங்கெல்லாம் கொண்டுவந்து நிறுத்துகிறது பார்” புலம்பியபடி இறங்கிய பரணர், காவலர்களை இருக்கப் பணித்துவிட்டு வீட்டின் கதவைத் தட்டுகிறார்.

சற்றுநேரத்தில் கதவை லேசாகத் திறக்கிறான் பேகன். அய்யோ பரணரா…? திருடனைத் தேள் கொட்டியது. இங்கு எதற்காக வந்தார்? ஒருவேளை இவரும் பரத்தையைத் தேடியிருப்பாரோ? யாரைத்தான் நம்புவது? மாவீரனும் மங்கையின் முன் சரணடைகிறான்… இவர் ஒரு புலவர் தானே, பாவம். இல்லை, இருக்காது. என் தந்தையையொத்த பரணர் என் அன்புக்குப் பாத்திரமானவர். வேறு காரியமாக வந்திருப்பார். என்னவென்று பார்ப்போம்…, யோசித்தவனாய் கதவைத் திறக்கிறான்.

அரச அணிகலனுடன் கம்பீர நடைபோட்ட அந்த பேகன் எங்கே? வெள்ளுடையோடு ஒளிந்துநின்று தயங்கித்தயங்கிக் கதவு திறக்கும் இந்த பேகன் எங்கே? கொடையால் மேன்மை பெற்றவனே… எக்கொடை தந்து இக்கீழ்மை பெற்றாய்?

பொங்கிய உணர்வுகளை அடக்கிய பரணர் பேகனிடம் சற்று விளையாடத் துணிந்தார். இவன் வா என்றால் வரமாட்டான். விளையாடிப் பார்ப்போம்.

“அய்யா… வணக்கம். என்னைப் பரணன் என்று ஊரார் அழைப்பர். நான் ஒரு எளிய புலவன். மூவேந்தர்களைப் பாடியிருக்கிறேன். கடையெழு வள்ளல்களைப் பாடியிருக்கிறேன். அதிலொரு வள்ளலாம் பேகனைப் பாடி பரிசில் பெற அரண்மனை சென்றேன். அவன் இவ்வூரில் உள்ளதாகச் சொன்னார்கள். பேகனைக் குறித்து உமக்குத் தெரியுமா? தோகை மயிலாடினாலே அது குளிரால் தான் என்று நினைத்து உடனே தன் பட்டு மேலாடையைப் போர்த்திய பேதை அவன்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்

என்ற குறளுக்கு நெறியாய் வாழ்பவன். நீர் அவனைக் கண்டீரா?” என்று பரணர் முடிக்குமுன் ஓடிவந்து கையமர்த்தினான் பேகன்.

“அய்யோ… பரணரே, என்ன இது? நான் என்றும் உங்கள் பேகன் தான். நீர் எப்போதும் என்னிடம் இருக்கும் எதையும் கேட்டுப் பெறலாம். ஆனால், இங்கு ஏன் வந்தீர்? என் தனிப்பட்ட காரியங்களில் பரணரே ஆனாலும் தலையிட நான் அனுமதிக்க மாட்டேன்” என்றான் பேகன்.

“வேந்தே… உனது காரியங்கள் எனக்கெதற்கு? நான் தலையிட மாட்டேன். எனக்கு நின் பரிசில் போதும்” பரணர்.

“அவ்வளவுதானே? என்ன வேண்டும் கேளுங்கள்.” கொடுத்துத் துரத்துவதில் குறியாயிருந்தான் பேகன்.

“என்ன கேட்டாலும் கொடுப்பாயா? பின் பேச்சு மாறமாட்டாயே?” சொருகினார் பரணர்.

“பேகன் சொன்ன சொல் மாறமாட்டானென்று பரணர் அறியாரோ?” சொருகிய இடத்தில் தடவினான் பேகன்.

“மாறிவிட்டால்?”

“எந்தன் மூச்சு நிற்கும்”

“இது போதும். வையாவி கோப்பெரும் பேகனே நான் வேண்டும் பரிசு” அம்பை எய்தார் பரணர்

சிரித்தான் பேகன். “பரணரே… என்ன உளறுகிறீர்? பரிசாக என்னைக் கேட்கிறீர்?”

“பேச்சை மாற்றாதே… சொன்ன சொல் தவறாதே. உன்னை எனக்குப் பரிசாகத் தரவேண்டும்.” குரலை உயர்த்தினார் பரணர்

“என்னை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்?” அவனுக்கு இன்னும் சிரிப்பு அடங்கவில்லை

“ஏதோ செய்வேன். அதெல்லாம் உனக்கெதற்கு? நான் கேட்ட பரிசைத் தா” உறுதியாய் நின்றார் பரணர்

அள்ளிக்கொடுத்த கரம் சும்மா இருக்குமா? “சரி பரணரே… இதோ நான் என்னையே தருகிறேன்” சொன்னதோடு கரங்களை பரணரிடம் நீட்டுகிறான் பேகன். மேடு பள்ளம் பார்க்காமல் எல்லார்க்கும் அள்ளித்தருவது மழை. அதுபோலவே இப்போதும் அள்ளித்தந்தான் இந்த பேகன்

“சரி வா…. போகலாம்” பேகனின் கரங்களைப் பற்றி இழுக்கிறார் பரணர்

“என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?”

“எங்கோ அழைத்துச் செல்கிறேன். நீ உன்னைப் பரிசாகத் தந்துவிட்டாய். இனி நீ நான் சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும். கேள்வி கேட்கும் உரிமை உனக்கில்லை… வா” என்று பரணர் அழைத்துச் செல்ல, பரத்தையின் வீட்டைத் திரும்பித்திரும்பிப் பார்த்தபடி புலவரோடு நடந்து தேர் ஏறுகிறான் பேகன்

தேர் நகர்ந்தது. “இந்தப் பரணருக்கு இன்று வேலையில்லையா? நம்மை வைத்து ஏதோ விளையாடுகிறார். சரி பொருத்திருந்து பார்ப்போம். இன்னும் பலகாலம் கழித்து வரும் இத்தமிழ் மண்ணின் மந்திரிமார், கம்பராமாயணத்தை இயற்றியது சேக்கிழார் என்று சொல்லி மக்களை சிரிக்க வைப்பர். அதைவிட உயர்ந்த நகைச்சுவையா இது?” என்று யோசித்த பேகனுக்கு, பரணரின் செயல் மீண்டும் மீண்டும் சிரிப்பையே வரவழைத்தது.

தேர் அரண்மனை முன் வந்து நின்றது. “பரணரே… அரண்மனைக்கு வரச்சொன்னால் நானே வந்திருப்பேனே? எதற்கு இந்தப் பரிசு நாடகம்?” அலுத்துக்கொண்டே இறங்கினான் பேகன்.

“பேசாதே…. வா” உரிமையோடு அதட்டியவாறு முன்சென்றார் பரணர். பின்தொடர்ந்தான் பேகன்.

“கண்ணகி” என்று பரணர் குரல் கொடுக்க, வந்து நின்றாள் பேகனின் மனைவி கண்ணகி. கண்ணகியின் முகம்பார்த்த பேகன் குற்றவுணர்வினால் கண்ணீர் பெருக்கினான். அவன் கண்ணீரைக் கண்டதும் அவளுக்கும் உள்ளம் உடைய, அமைதியைக் கலைத்தார் பரணர்.

“கண்ணகி… இதோ உன் கணவன் வையாவி கோப்பெரும் பேகன். ஆவியர்குல வேந்தன். நான் இவனைப் பரிசாகக் கேட்டுப் பெற்றேன். இவன் என் பரிசு. என் இஷ்டப்படி தான் இவன் இனி நடப்பான். அவன் இனி என் இஷ்டப்படி உன்னோடு மட்டுமே வாழ்வான்” பரணர் முடிக்கும்முன் அவர் கைகளைப் பற்றினான் பேகன்.

“மன்னிக்க வேண்டும் பரணரே… குடிகளைக் காத்திடும் வேந்தன் அரண்மனை செல்லாது பரத்தையர் வீடு சென்றால் என் குடிகளே என்னை இகழ்வர். வரலாறு என்னை உமிழும். ஏற்றநேரத்தில் என்னை இடித்துரைத்து அப்பழியிலிருந்து காத்தீர். நான் உமக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று உணர்ச்சிவயப்பட்டான் பேகன்.

“அஞ்சற்க வேந்தே… தவறிழைப்பது மனிதர் குணம். உணர்ந்து திருந்துதல் மேன்மையான குணம். என்னையும் மயிலாக எண்ணி என்மேல் போர்வை போர்த்தினாய். நன்றி. பேகனும் கண்ணகியும் மீண்டும் இணைந்தனர். இது போதும் எனக்கு. நான் வருகிறேன்” கிளம்ப எத்தனித்தார் பரணர்.

“பரணரே… என்னையும், கண்ணகியையும் சேர்த்து வைத்துவிட்டு நீர் எங்கே போகிறீர்?” தடுத்தான் பேகன்

“வேந்தர் குளத்துநீர் போன்றோர். ஓரிடத்தில் தேங்கியிருந்து குடிகளைக் காப்பர். புலவர் ஆற்றுநீர் போன்றோர். செல்லுமிடமெல்லாம் பாடி தமிழ் வளர்க்கக் கட்டுப்பட்டோர். இந்த ஆறு மீண்டும் விரைவாய் வையாவி வந்து என் அன்பு பேகனைச் சந்திக்கும். நீ அரசவைக்குச் செல். நான் கண்ணகியிடம் பேசிவிட்டுச் செல்கிறேன்” என்று சொல்லி பேகனுக்கு விடை கொடுத்து, இக்கதையின் முதல்வரியை கண்ணகியிடம் உரைத்துவிட்டு விடைபெறுகிறார் பரணர்.
———-

“புலவரே… நீர் பொல்லாத ஆள்தான்” பாராட்டினான் முதல் காவலன். மூவரும் சிரித்தார்கள்.

“புலவரே… நான் உமது பாடல்களைக் கேட்டதிலிருந்து உமது ரசிகனாகவே ஆகிவிட்டேன். உமது தமிழுக்கு எல்லோரும் மரியாதை அளிக்க, வேந்தன் மட்டும் மாறுபடுவானா என்ன?” என்றான்

“வையாவி நாட்டிலே பேகனுக்கு அடுத்து எனக்கு இன்னொரு ரசிகனா?” விளையாடிய பரணர், இரண்டாவது காவலனைப் பார்த்து “அப்பா, நீ யாருக்கு ரசிகன்?” என்று வினவ…

“பரணரே… நான் இவனைப் போல் பொய் சொல்லப் போவதில்லை. உம்மைப் போன்ற புலவர்கள் அரசவையில் பாடியதை வெளியுலகம் கேட்காது. எந்த வேந்தனும் குடிமக்களைப் படிப்பித்ததில்லை. அப்படிப் படிப்பித்திருந்தால் நாங்கள் ஏன் காவலராய் இருக்கப் போகிறோம்? எமக்குப் பிந்தைய சந்ததிகளாவது தமிழ் கற்று சீவக சிந்தாமணியையும், குண்டலகேசியையும் எழுதட்டும். தவறிருந்தால் பொருத்தருள்க” என்று சொன்ன இரண்டாவது காவலனின் தைரியத்தை மெச்சிய பரணர், விடைபெற்று நடக்கத் துவங்கினார்.
——–

மடத்தகை மாமயில் பணிக்குமென் றருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் 
கடாஅ யானைக் கலிமான் பேக 
பசித்தும் வாரேம் பாரமும் இலமே! 
களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ் 
நயம்புரிந்துறையுநர் நடுங்கப் பண்ணி 
அறஞ்செய் தீமோ அருள்வெய் யோயென 
இஃதுயாம் இரந்த பரிசில் அஃதிருளின் 
இனமணி நெடுந்தேர்ஏறி 
இன்னா துறைவி அரும்படர்களைமே” (புறநானூறு 145)

Post your Comments...